ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2023 3:25 AM IST (Updated: 24 Jun 2023 3:57 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்

ஈரோடு

பர்கூர் பழங்குடியின பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

380 மாணவ-மாணவிகள்

அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 380 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 6-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்புவரை தலா ஒரு வகுப்பும், பிளஸ்-1, பிளஸ்-2 தலா 3 வகுப்புகளும் என மொத்தம் 11 வகுப்புகள் உள்ளன. ஆனால் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை. இங்கு 10 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருப்பதால் வகுப்புகளுக்கு தேவையான ஆசிரியர்கள் யாரும் இல்லை.

இதுபோல் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

எனவே பர்கூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் பர்கூர் பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரி பள்ளிக்கூடத்தில் மாணவ- மாணவிகள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

ஆர்ப்பாட்டம்

இதைத்தொடர்ந்து பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் நேற்று காலை பர்கூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஜே.கணேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், தி.மு.க. சார்பில் பி.மாணிக்கம், அ.தி.மு.க. சார்பில் ஆர்.முருகன், தே.மு.தி.க. சார்பில் பி.முருகன், சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில தலைவர் தினேஷ் சீரங்கராஜ், மாநில துணைத்தலைவர் சினேகா, ஈரோடு மாவட்ட செயலாளர் கே.பிரபு, பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'பள்ளிக்கூடத்தில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி கட்டிடத்தை புதிய கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும். பழங்குடியின பள்ளிக்கூடத்தை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்,' ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பர்கூர் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், 'இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story