விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் நீதி சோழன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார். 100 நாள் வேலை திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.300 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தேவகி உள்பட பலர் கலந்து கொண்டனர். குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கணபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.