கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்ளின், பொருளாளர் செல்லத்துரை, காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், "கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் பஸ்நிலையத்தை கட்டியது. இந்த பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் பஸ்கள் கூடுதல் பஸ்நிலையத்துக்கு செல்லாமல், நான்கு வழிச்சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்வதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே விலைமதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாத்திட அனைத்து பஸ்களும், புதிய கூடுதல் பஸ்நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.