மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்த்து திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, முல்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். கண்டன ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரா.சுபாஷ் சந்திரபோஸ், ம.தி.மு.க. நகர செயலாளர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் நந்தி, காங்கிரஸ் கட்சி தொழிற்சங்க தலைவர் மணி, த.மு.மு.க.சார்பில் அஸ்லாம் பாஷா, இந்திய முஸ்லிம் லீக் சார்பில் வாகித் உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறுகையில், ''வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிடும். பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற ஒருமித்த கருத்துக்கள் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு போட்டியிடுவோம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியானது தேர்தலில் ஜாதி, மதம், பணம் ஆகியவற்றுக்கு எதிரானது. ஆகையால் தேர்தலில் விழும் ஓட்டுகளை வைத்து அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது. வருகிற மே மாதம் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்றுவோம், இந்தியாவை காப்போம் என்ற ரத யாத்திரை பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்'' என்றார்.