100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முழு ஊதியத்துடன் 4 மணிநேர வேலை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தன், துணைத்தலைவர் அஞ்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியத்துடன் கூடிய 4 மணிநேரம் மட்டுமே வேலை நேரம் என நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அரசாணைப்படி அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க கோரி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் ஜெபஸ்டியான், சுந்தரபாண்டியன், ஜேசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.