கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்
கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு திருமக்கோட்டையை பூர்வீகமாக கொண்டு வெளிநாட்டில் வசித்து வரும் உறவினர்கள் மூலம் அரசு மருத்துவ கட்டிடங்கள், மருத்துவ குடியிருப்பு, செவிலியர் குடியிருப்பு, ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை கட்டப்பட்டிருந்தும், போதிய டாக்டர்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மற்றும் 24 மணி நேர மருத்துவசேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் திருமக்கோட்டை கிராம நிர்வாகிகள், இளைஞர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் பவானி தலைமையில் ஒன்றிய செயலாளர் தமயந்தி, ஒன்றிய தலைவர் சுபா ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் கூறியதன் பேரில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.