திட்டமிட்டபடி பொள்ளாச்சியில் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்
திட்டமிட்டபடி பொள்ளாச்சியில் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்
பொங்கலூர்
ஆழிற்றிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கான அரசு ஆணையை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் வரும் 27-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பி.ஏ.பி.பாசன திட்டம்
பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. பாசனத்துக்கும் குடிநீருக்கும் அதிக அளவு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில் ஆழியாற்றில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த திட்டத்தை கைவிடக்ேகாரி 27-ந் தேதி பொள்ளாச்சி- பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாசன சபை தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைக்குமாறும், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் இந்தப் பிரச்சினை குறித்து எடுத்துச்சென்று நல்ல தீர்வு எட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வராததால் திட்டமிட்டபடி வரும் 27-ந்தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கலந்து கொள்ள வேண்டும்
இதுகுறித்து பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்ட பாலாறு படுகையின் நிர்வாகிகள் மெடிக்கல் பரமசிவம் மற்றும் கண்டியன்கோவில் கோபால் ஆகியோர் கூறியதாவது:-
ஒட்டன்சத்திரம் பகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்து 2 திட்டங்களும், பரப்பலாறு மற்றும் பாலாறு-பொருந்தலாறு ஆகிய அணைகளில் இருந்து 2 திட்டங்களும் என 4 குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தில் ஏற்கனவே பாசனத்துக்கும் குடிநீருக்கும் அதிக அளவு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில் ஆழியாற்றில் இருந்து 150 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்வது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
எனவே 27-ந்தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பி.ஏ.பி.பாசன விவசாயிகளும், பொதுமக்களும், தன்னார்வலர்களும், பொதுநல அமைப்புகளும், வியாபாரிகள் திரளாக கொள்ள உள்ளார்கள். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பாக இந்த குடிநீர் திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்தால் இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக நாங்கள் நடத்தத் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
----