டிரோன் மூலம் 'நானோ யூரியா' தெளிப்பது குறித்து செயல் விளக்கம்
வள்ளுவக்குடியில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து அளிக்கப்பட்ட செயல் விளக்கத்தை திரளான விவசாயிகள் பார்வையிட்டனர்.
சீர்காழி:
வள்ளுவக்குடியில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து அளிக்கப்பட்ட செயல் விளக்கத்தை திரளான விவசாயிகள் பார்வையிட்டனர்.
நானோ யூரியா
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சீர்காழி அருகே உள்ள வள்ளுவக்குடி கிராமத்தில் நானோ யூரியாவை டிரோன் மூலம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயி ஜானகிராமன் என்பவருடைய வயலில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் முன்னிலை வகித்தார்.அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் நானோ யூரியாவின் முக்கியத்துவத்தையும், பயன்பாடுகளையும் பற்றி விளக்கம் அளித்தார். அப்போது அவர், 'நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது. நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது. மண் நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.
500 மில்லி நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் அதிக செலவை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பாதியாக குறைக்கலாம்.
5 முதல் 10 நிமிடங்கள்
ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மி.லி. நானோ யூரியா மற்றும் 20 மி.லி. ஒட்டுப்பசை தேவைப்படுகிறது. 5 முதல் 10 நிமிடத்திற்குள்ளாகவே ஒரு ஏக்கர் பரப்பிற்கு இந்த நானோ யூரியாவை டிரோன் மூலம் தெளித்து விடலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் யூரியா மேலுரத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம்' என்றார். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு செயல் விளக்கத்தை பார்வையிட்டனர். வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன்,் உதவி தொழில் நுட்ப மேலாளர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.