2026-ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி - பிரேமலதா பேச்சு


2026-ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி - பிரேமலதா பேச்சு
x
தினத்தந்தி 14 Dec 2023 11:09 AM GMT (Updated: 14 Dec 2023 1:24 PM GMT)

2024-ல் தேமுதிக எம்.பி.க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி என தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேமலதா பேசினார்.

சென்னை,

சென்னை திருவேற்காட்டில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரேமலதா தேர்வு செய்யப்பட்டது குறித்து அறிவிக்கப்பட்டதும் தேமுதிக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், தேமுதிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் பிரேமலதா, விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதன் பின்னர் பிரேமலதா உரையாற்றியதாவது;

" 2024-ல் தேமுதிக எம்.பி.க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி. 2026-ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி. நான் வெறும் பொதுச்செயலாளர் அல்ல. கட்சியின் வளர்ச்சிக்காக உங்களோடு சேர்ந்து வேலை செய்ய வேலையாளாக நிற்கிறேன்.

என் கண்ணின் இமை போல கேப்டனை பார்த்துக்கொள்வேன். அவர் 100 வயது வரை வாழ்வார். அவருக்கு எந்த குறையும் வராது. கேப்டன் நலம் பெற வேண்டுமென்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story