"தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது": தூத்துக்குடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
“தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தூத்துக்குடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
"தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது" என்று தூத்துக்குடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் உலக வெறிநோய் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்க நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
4 தடுப்பூசிகள்
2007-ம் ஆண்டு வெறிநோய் தாக்கம் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வெறிநோய் தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. வெறிநாய் கடித்தால், தொடர்ந்து முறையாக 4 தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். முன்பு தொப்புளில் ஊசி போடுவார்கள். தற்போது அந்த நிலை கிடையாது. இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களைதேடி மருத்துவம் மூலம் 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு பிறகு இருதய நோய் பாதிப்பு அதிகமாக வருகிறது. இதனால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 14 மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 86 ஆயிரம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் 110 தன்னார்வலர்கள் மூலம் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர் தன்னார்வலர்கள் மூலம் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருந்துகள் இருப்பு
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 796 குப்பிகள் நாய்க்கடி மருந்தும், 35 ஆயிரத்து 502 குப்பிகள் ஹீமோ குளோரோபில் மருந்தும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 87 பாம்புக்கடி மருந்தும் இருப்பு உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரத்து 380 பேரும், பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 14 ஆயிரத்து 484 பேரும் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி மாதிரி பரிசோதனை செய்யும் கருவிகள் வைக்கப்படுகிறது. விரைவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைக்கப்படும்.
டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் பருவமழை காலங்களில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 26 பேர் இறந்தனர். 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 65 பேர் இறந்தனர். கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை 4 ஆயிரத்து 454 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்து உள்ளனர். அரசின் தொடர் நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கோர்ட்டில் சில வழக்குகள் உள்ளன. அந்த வழக்கில் தீர்வு பெறப்பட்டதும் பணியிடங்கள் நிரப்பப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 30 சதவீதம் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது" என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) சுந்தரலிங்கம், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
----------------------