டெங்கு களப்பணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் பாக்கியை வழங்க வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு
மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய டெங்கு களப்பணியாளர்கள் 6 மாத சம்பளம் பாக்கி உள்ளதாகவும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய டெங்கு களப்பணியாளர்கள் 6 மாத சம்பளம் பாக்கி உள்ளதாகவும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாதி சான்றிதழ், வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, உபகரணங்கள், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இதன் மூலம் 650 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பழுது பார்ப்போர் சங்கம்
கூட்டத்தில் அனைத்து மோட்டார் வாகன பணிமனை பழுது பார்ப்போர் சங்கத்தினர் தலைவர் சையத்தாஜிதின் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- போளூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் பல ஆண்டுகளாக சுமார் 250-க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றோம். பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் சில நேரங்களில் இடைஞ்சலாக உள்ளது. எனவே எங்களுக்கென்று ஒரு பழுது நீக்கும் நகர் அமைக்க அரசுக்கு சொந்தமான இடங்களை ஒதுக்கி பழுப்பார்ப்போர் நகர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுவரை நாங்கள் எந்த நலவாரியத்திலும் இணையவில்லை. மாநில முதல்- அமைச்சர் தனி நலவாரியம் அமைத்து தர திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், முதல்- அமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
6 மாத சம்பளம் பாக்கி
செங்கம் தாலுகா மேல்பள்ளிப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய டெங்கு களப்பணியாளர்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மேல்பள்ளிப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்களிலும் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக சிக்கன் குனியா, டெங்கு மற்றும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, அவர்களுக்கு உணவு வழங்குவது, பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை 119-க்கும் மேற்பட்ட மஸ்தூர்கள் வேலை செய்து வருகிறோம்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 119 பணியாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்த சம்பளம் வழங்கப்படவில்லை. பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் பணம் இல்லை என்று தட்டிகழிக்கின்றர். இப்பணியில் படித்த இளைஞர்கள் இச்சம்பளத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். பல தொழிலாளர்களுக்கு திருமணம் ஆகியுள்ளது. 119 பேரின் 6 மாத சம்பள பாக்கியை உடனே வழங்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.