அரசு பள்ளிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
திண்டுக்கல்லில் அரசு பள்ளிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கலெக்டர் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தில் பருவகால நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசுகையில், அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்களில் மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். இதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினியை இருப்பு வைத்து பயன்படுத்த வேண்டும். அரசு பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், ஆஸ்பத்திரிகளை தூய்மையாக வைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
டெங்கு தடுப்பு பணி
அதன்பேரில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்படி சுகாதார பணியாளர்களுக்கு ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்பட 15 பள்ளிகள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் நேற்று டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்தது.
கொசு மருந்து
முதற்கட்டமாக பள்ளிகளின் வளாகத்தில் புதர்போல் வளர்ந்திருக்கும் செடி-கொடிகள் அகற்றப்பட்டன. பின்னர் பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் தண்ணீர் தொட்டிகள் இருக்கிறதா? என ஆய்வு செய்த அதிகாரிகள், அந்த தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்களை அழிக்கும் அபேட் மருந்தை தெளித்தனர். மேலும் பள்ளி வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இதேபோல் தனியார் பள்ளிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், வணிக வளாகங்கள் தூய்மையாக இருக்கிறதா? என்று அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், ஆய்வின் போது தூய்மையின்றி தனியார் பள்ளிகள், வணிக வளாகங்கள் இருப்பது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழனியில் வீடு, வீடாக ஆய்வு
இதேபோல் பழனி நகர் பகுதியிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. நகர்நல அலுவலர் மனோஜ்குமார் தலைமையில் டெங்கு ஒழிப்புக்கு என தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நகராட்சி பகுதியில் வீடு, வணிக நிறுவனங்களில் நேரடியாக சென்று சோதனை செய்கின்றனர். அனைத்து தெருக்களிலும் கொசுமருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
தண்ணீர் தேங்கும் வகையில் தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள் போன்றவற்றை திறந்தவெளியில் போடக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரில் இளநீர் கடை வைத்துள்ள உரிமையாளர்களுக்கு காலி இளநீர் கூடுகளை நகராட்சி குப்பை கிடங்கில் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்காமல் இளநீர் கூடுகளை சாலையோரம் கொட்டினால், சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.