அறச்சலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது


அறச்சலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு  இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல்  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது
x

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு

அறச்சலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை கரைக்கப்பட்டது.

அனுமதி மறுப்பு

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சதுர்த்தியையொட்டி 31 விநாயகர் சிலைகள் வைக்க இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனினும் விநாயகர் சதுர்த்தி அன்று 31 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி 18 சிலைகள் கீழ்பவானி பாசன வாய்க்காலில் கரைக்கப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 சிலைகள் கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்பட்டது.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து நாச்சுவலசு பிரிவில் மீதம் இருந்த ஒரு விநாயகர் சிலையை கரைக்க இந்து மக்கள் கட்சியினர் நேற்று மதியம் சென்றனர். ஆனால் போலீசார் ஊர்வலமாக சென்று சிலையை கரைக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் சிலர் அறச்சலூரில் உள்ள கொடுமுடி ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களிடம், 'ஊர்வலமாக சென்று சிலையை கரைக்க அனுமதி இல்லை. அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சென்று கரைத்துக்கொள்ளலாம்' என்று கூறினார்கள்.

போலீஸ் குவிப்பு

இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறும்போது, ஈரோடு பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அவசர அவசரமாக நள்ளிரவில் 12 சிலைகளை கரைத்துள்ளனர். இந்த செயலுக்கு போலீசாரை கண்டிக்கிறோம். மேலும் அனைத்து மதத்தினரின் விழாவுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதல்-அமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துகள் தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது' என்றார்.

இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருகே உள்ள கொடுமுடி கைகாட்டி பிரிவுக்கு சென்று அங்குள்ள கீழ்பவானி பாசன வாய்க்காலில் சிலையை கரைத்தனர்


Next Story