திருவாதவூரில் இருந்து மதுரைக்கு பல்லக்கில் மாணிக்கவாசகர் புறப்பாடு


திருவாதவூரில் இருந்து மதுரைக்கு பல்லக்கில் மாணிக்கவாசகர் புறப்பாடு
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் இன்று நரியை பரியாக்கும் லீலை நடக்கிறது. இதில் சுவாமியுடன் வீதிஉலா வருவதற்கு திருவாதவூரில் இருந்து மதுரைக்கு பல்லக்கில் மாணிக்கவாசகர் புறப்பட்டார்.

மதுரை

மேலூர்,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் இன்று நரியை பரியாக்கும் லீலை நடக்கிறது. இதில் சுவாமியுடன் வீதிஉலா வருவதற்கு திருவாதவூரில் இருந்து மதுரைக்கு பல்லக்கில் மாணிக்கவாசகர் புறப்பட்டார்.

மாணிக்கவாசகர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இது "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்'' என்று திருவாசகத்தை உலகுக்கு அருளிய மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவின் போது 16 கால் மண்டபத்தில் நரியை பரியாக்கும் நிகழ்ச்சி, புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நடைபெறும் இந்த திருவிழாவில், இன்று(திங்கட்கிழமை) நரியை பரியாக்கும் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமையும்) மதுரை புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழாவும் நடைபெறுகிறது.

மதுரையில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி-சுந்தரேசுவரருடன் இணைந்து மாணிக்கவாசகர் வீதிஉலா வருவதற்காக திருவாதவூர் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர் நேற்று காலை புறப்பட்டார். செல்லும் வழியில் திருக்கண் மண்டபங்களில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்புரிந்தார்.

பக்தர்கள் மாணிக்கவாசகரை வரவேற்று வழிபட்டு அன்னதானம் வழங்கினர். வழி நெடுக மண்டகப்படிகளில் அருள்பாலித்து இன்று மீனாட்சி அம்மன் கோவிலை அவர் வந்தடைவார்.

நரியை பரியாக்கிய சிவன்

அரிவர்தன பாண்டியன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரிடம், குதிரைகள் வாங்கி வரும்படி பொற்காசுகளை கொடுத்து மன்னர் அனுப்பியுள்ளார். ஆனால் மாணிக்கவாசகர் குதிரை வாங்கச்செல்லும் வழியில் சிவகங்கை அருகே ஆவுடையார்கோவில் என்னும் ஊரில் சிவன் கோவிலை கட்டுகிறார்.

குதிரைகள் வாங்க கொடுத்த பணத்தில் கோவிலை கட்டியதால் கையில் பணம் இல்லாத மாணிக்கவாசகரின் நிலையை கண்ட சிவபெருமான் நரிகளை பரிகளாக(குதிரைகளாக) மாற்றி மாணிக்கவாசகரிடம் அனுப்பி வைத்தார். அந்த குதிரைகளை மாணிக்கவாசகர் மதுரைக்கு மன்னனிடம் அனுப்பியதாக புராண வரலாறு கூறுகிறது.


Related Tags :
Next Story