தீபாவளி சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டியவர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகை-மறியல்
செய்யாறு
செய்யாறில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் வசூலித்த நிதி நிறுவனம் பொருட்கள் தராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் அவர்கள் நிதி நிறுவன வளாகத்திலேயே குழந்தைகளுடன் காத்துக்கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பணம் வசூல்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஒரு தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்து ரூ.100-லிருந்து ரூ.20 ஆயிரம் வரை மாத தவணை, ஒரே தவணை என்ற முறையில் பணம் வசூல் செய்தது.
இவ்வாறு திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பல கோடி ரூபாய வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் முதலீடு செய்பவர்களுக்கு மளிகை பொருட்கள், வீட்டு உபயோக சாமான்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வீட்டு மனைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். இத்திட்டத்தில் நபர்களை சேர்த்துவிடும் முகவர்களுக்கு நபர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பல சலுகைகள் அறிவித்திருந்தனர்.
முற்றுகை
ஆனால் வசூல் செய்த தொகைக்கு அவர்கள் அறிவித்ததுபோல் தீபாவளி பொருட்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து நிதிநிறுவனத்தினரிடம் பணம் செலுத்தியவர்கள் கேட்டபோது அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. அதனை கண்டித்து அந்த நிறுவனத்தை 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.
அந்த நிதி நிறுவனத்தில் யாரும் இல்லாததால் அனைவரும் ஆவேசமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
குழந்தைகளுடன் காத்திருப்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்குவது குறித்து உத்தரவாதம் வழங்க நிறுவனம் தரப்பில் யாரும் இல்லாத நிலையில் நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதனை ஏற்க மறுத்த வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள், ''நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வந்து பதில் தெரிவிக்கும் வரையில் தாங்கள் இங்கிருந்து கலைந்து போக மாட்டோம்'' என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. சிலர் கலைந்து சென்றாலும் பலர் முகவர்களுடன் பூட்டிக்கிடக்கும் நிதி நிறுவன அலுவலக வளாகத்திலேயே குழந்தைகளுடன் தரையில் படுத்தும், கொட்டும் மழையில் மரத்தடியிலும் காத்துக்கிடக்கின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.