'விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்'-போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா அறிவுறுத்தல்
விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று விடுதி உரிமையாளர்களுக்கு போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா அறிவுறுத்தினார்.
சேலம் மாநகரில் உள்ள ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று லைன்மேட்டில் உள்ள போலீஸ் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசும் போது, 'விடுதிகளில் அறை எடுத்து தங்குபவர்களிடம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை பெற்று, அவர்களின் முழு விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்குபவர்கள் அளிக்கும் தகவல் உண்மை தானா? என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் என தெரிந்தால், போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற விடுதி, ஓட்டல் நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை அவர் வழங்கினார். இதில் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், அசோகன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.