துணை மேயர் இருக்கை விவகாரம்:மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு வாக்குவாதம்
துணை மேயர் இருக்கை விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு வாக்குவாதம் ஏற்பட்டது.
சேலம்,
கவுன்சிலர்கள் வாக்குவாதம்
சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இமயவர்மன் மாநகராட்சி கூட்ட மன்றத்தில் கவுன்சிலர்கள் அமரும் இடத்தில் முதல் வரிசையில் துணை மேயருக்கு, இருக்கை ஒதுக்கீடு செய்வது குறித்து அரசாணை உள்ளது. எனவே சேலம் மாநகராட்சி மன்றத்தில் அந்த அரசாணையை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
அப்போது மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ஜெயக்குமார் இது தனிப்பட்ட பிரச்சினை. மன்றத்தில் பேச வேண்டிய பிரச்சினை அல்ல என்றார். அதற்கு இமயவர்மன் எழுந்து பேசினார். அப்போது ஜெயக்குமார் நீங்கள் கூட்டணியில் உள்ளீர்களா? அல்லது எதிர்க்கட்சியில் உள்ளீர்களா? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. பின்னர் ஜெயக்குமார் 1996-ல் இருந்த தேர்தல் விதிமுறை வேறு. இப்போது உள்ள விதிமுறை வேறு. இது குறித்து மேயர், ஆணையாளர் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.
வரி விலக்கு
கவுன்சிலர் தெய்வலிங்கம் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும். மண்சாலையை, தார்சாலையாக மாற்றும் திட்டத்தில் குறிப்பிட்ட மண்டலத்தை தேர்ந்தெடுத்து ஒரு மண்டலத்திற்கு குறைந்தபட்சம் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும். அப்போது தான் தார்சாலை அமைக்கும் பணி தரமாக இருக்கும் என்றார்.
மண்டல குழு தலைவர் உமாராணி பேசுகையில், அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ.2½ கோடியில் அமைப்பு சாரா நூலக கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் நூலகம் திறக்கப்பட உள்ளது. எனவே இந்த நூலகத்திற்கு கவுன்சிலர்கள், பொதுமக்கள் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.
திட்டம்
மண்டல குழு தலைவர் கலையமுதன் கூறுகையில். சேலம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பிடங்கள் அடிக்கடி தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தாமல் இருப்பதால் அதிகம் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிட கட்டிடங்களை சுத்தம் செய்ய திட்டம் உள்ளது. அதனை விரைவில் செயல்படுத்தி துர்நாற்றம் வீசாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில் அரசு முறை பயணமான இத்தாலி சென்று வந்து ஆணையாளர் கிறிஸ்துராஜுக்கு, மேயர் ராமச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கூட்டத்தில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.