கூலித்தொழிலாளி இறந்த இடத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


கூலித்தொழிலாளி இறந்த இடத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 9:46 AM GMT)

ஏற்காட்டில் கூலித்தொழிலாளி இறந்த இடத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

சேலம்

ஏற்காடு

ஆடு மேய்க்கும் தொழிலாளி

ஏற்காடு காக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு மணிமேகலை (33) என்ற மனைவியும், மகேஷ் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி காகம்பாடி அருகே சமுத்திரகாடு வனப்பகுதியில் இறந்து கிடந்தார். விசாரணையில் மூர்த்தி ஆடுகளுக்கு இலை வெட்டுவதற்காக சென்றபோது மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 7 நபர்கள் கொண்ட கும்பல் மூர்த்தியை சுட்டு கொன்றுவிட்டதாக ஏற்காட்டில் உள்ள வாட்ஸ்-அப் குழுக்களில் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து மூர்த்தி மனைவி மணிமேகலை என்னுடைய கணவர் இறப்பில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவரை சிலர் சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என நானும், என்னுடைய குடும்பத்தினரும் கருதுகிறோம். எனவே இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதுதொடர்பாக நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வழக்கில் குற்றச்சாட்டபட்டுள்ள 8 பேர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏற்காட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story