அரண்மனை குளம் தூர்வாரப்படுமா?
வேட்டங்குடி ஊராட்சியில் அரண்மனைக் குளம் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கொள்ளிடம்;
வேட்டங்குடி ஊராட்சியில் அரண்மனைக் குளம் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அரண்மனை குளம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சியில் அரண்மனைக் குளம் உள்ளது. இந்த குளத்தை இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும் தங்களது கால்நடைகளை பராமரிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் மண்டி கிடப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூா்வார கோரிக்கை
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கொள்ளிடம் ஒன்றியம், வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள அரண்மனைக்குளம் ஊராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. 10-க்கும் மேற்பட்ட தெருக்களை சேர்ந்த கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் இருந்த இந்தக் குளம் தற்போது பயன்பாடு இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக ஆகாயத்தாமரை மண்டி கிடக்கிறது. குளத்தில் எங்கு பார்த்தாலும் ஆகாயத்தாமரை படர்ந்து கிடக்கிறது இதை அகற்றக் கூறி பல முறை மனுக்கள் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் உள்ள கால்நடைகளை பராமரிப்பதற்கும் இந்தக் குளம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே குளத்தை ஆழப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் மற்றும் படித்துறை கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.