கொத்தமங்கலம் ஊராட்சி திருக்குளம் தூர்வாரப்படுமா?


கொத்தமங்கலம் ஊராட்சி திருக்குளம் தூர்வாரப்படுமா?
x

ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி திருக்குளம் தூர்வாரி சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி திருக்குளம் தூர்வாரி சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருக்குளம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் விஸ்வநாதபுரத்திற்கு செல்லக்கூடிய சாலையில் மிகப்பெரிய குளம் உள்ளது. இந்த குளம் திருக்குளம் என்று எல்லோராலும் அழைக்கப்படும். இந்த குளத்தின் அருகில் புகழ்பெற்ற விஸ்வநாத சாமி சிவாலயம் உள்ளது. மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த குளத்தில் தான் குளிப்பதற்கும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் எடுப்பதற்கும் பல்வேறு பயன்பாடுகளுக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பயன்படுத்துவார்கள்.ஆனால் சமீபகாலமாக இந்த குளத்தில் ஆகாய தாமரைகள் அதிகமாக மண்டி குளத்து நீர் வீணாகும் சூழல் உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தை தூர்வாரி குளத்து நீர் வீணாகாமல் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூர்வாரி சீரமைக்க கோரிக்கை

இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் சண்முகம், கூறியதாவது:-

கொத்தமங்கலம் விஸ்வநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள இந்த திருக்குளம் பாரம்பரியமான குளம். இந்த பகுதி மக்கள் இந்த குளத்தின் தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும். சமீப காலமாக குளத்தில் ஆகாய தாமரைகள் மண்டி உள்ளதால் அதை உடனடியாக அகற்றி தண்ணீர் கெடாமல் பாதுகாக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடைமை ஆகும்.எனவே குளத்தை தூர்வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

கொத்தமங்கலம் வினோதினி:- திருக்குளம் இந்த பகுதி மக்களின் முக்கியமான ஒரு வாழ்வாதாரம். இப்பகுதி மக்களின் அனைத்து பயன்பாட்டுக்கும் இந்த குளம் முக்கிய பங்காற்றும். ஒருமுறை தண்ணீர் நிரப்பி கோடை காலம் முடிந்து அடுத்த முறை தண்ணீர் வரும் வரை இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும். எனேேவ பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தின் நீர் கெட்டுப்போகாமல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story