சி, டி வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்
பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய சி, டி, வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்;
பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய சி, டி, வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை நேற்று பார்வையிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலக்குடியில் முதலை முத்துவாரி என்ற "சி" பிரிவு வாய்க்காலையும், பூதலூர் பகுதியில் விண்ணமங்கலத்தில் முள்ளம்பள்ளம் வாய்க்கால் மற்றும் அதே பகுதியில் உள்ள "சி" பிரிவு வாய்க்கால்களையும் ஆய்வு செய்தார்.ஆலக்குடி, விண்ணமங்கலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் பலரும் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
வாய்க்கால்கள்
அப்போது, பூதலூர் வட்டம் ராயமுண்டான்பட்டி விவசாயி வெ.ஜீவக்குமார் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-காவிரி டெல்டாவில் 36 பிரதான ஆறுகளும் 29 ஆயிரம் கிளை வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளது.ஆண்டுதோறும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கண்ணி வாய்க்கால்கள் எனப்படும் சி, டி பிரிவு வாய்க்கால்கள் அதிக அளவில் தூர்வாரப்படுகிறது. இந்த வாய்க்கால்கள் தான் மழைக்காலங்களில் உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
பாராட்டு
இந்த வாய்க்கால்களை தூர்வாரவும், அதை முதன்முறையாக நேரில் ஆய்வு செய்த தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இந்த கண்ணி வாய்க்கால்களை தொடர்ந்து தூர்வாரி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான பயிர் கடன், விதைகள், உரம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். குறுவையில் இந்த ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி
புதுச்சத்திரம் விவசாயி வீரசோழராஜேந்திரன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: -விண்ணமங்கலத்தில் ரூ.34 ஆயிரம் மதிப்பில் 920 மீட்டர் நீளத்தில் தூர்வாரப்பட்ட "சி" பிரிவு வாய்க்காலை் ஆய்வு செய்த முதல் -அமைச்சரை பாராட்டுகிறோம். எங்களது பகுதியில் முதன் முறையாக சி, டி, பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதற்கு முதல் - அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதைப்போல மீதி உள்ள சி, டி பிரிவு வாய்க்கால்கள், வடிகால்களையும் முன்னுரிமை அடிப்படையில் தூர் வார வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனா்.