வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஆசைப்பட்டுஆன்லைன் மோசடியில் ரூ.2¼ லட்சத்தை இழந்த வாலிபர்:தேனி சைபர் கிரைம் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்


வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஆசைப்பட்டுஆன்லைன் மோசடியில் ரூ.2¼ லட்சத்தை இழந்த வாலிபர்:தேனி சைபர் கிரைம் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடியில் சிக்கி ரூ.2¼ லட்சத்தை வாலிபர் இழந்தார். அந்த பணத்தை தேனி சைபர் கிரைம் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.

தேனி

ரூ.2¼ லட்சம் மோசடி

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அபுஅயூப் அன்சாரி (வயது 25). இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. வீட்டில் இருந்தபடியே பகுதிநேர வேலை பார்த்து சம்பாதிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் குறிப்பிட்ட இணையதள முகவரியை அவர் திறந்து பார்த்தார். அதில் குறிப்பிட்டபடி பயனர் கணக்கு தொடங்கினார்.

அதில் பணம் முதலீடு செய்துவிட்டு, கொடுக்கப்படும் இணையவழியிலான வேலையை செய்தால் ஊக்கத்தொகை வரும் என்று கூறப்பட்டு இருந்தது. அவரும் அதை நம்பி ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் அவர் செலுத்திய பணம் திரும்ப கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் செய்தார். பின்னர் அவர் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்தும் புகார் தெரிவித்தார்.

போலீசார் மீட்டனர்

அவர் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு விவரங்களையும், அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் நடந்த விவரங்களையும் போலீசார் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சாப் மாநிலம் லூர்தியானா பகுதியை சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு அந்த பணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து லூர்தியானா நபரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. பின்னர், அந்த வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். அவ்வாறு மீட்கப்பட்ட பணத்தை, அபுஅயூப் அன்சாரியிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேற்று ஒப்படைத்தார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story