குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை


குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக ஆசைகாட்டி  பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி:  சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடியில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

போடியை சேர்ந்த முருகன் மகள் பிரியா (வயது 25). இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்தார். தங்களின் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் வரை குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.

அதை உண்மையென நம்பிய பிரியா, கடன் வாங்க முடிவு செய்தார். இதற்காக அந்த நபருக்கு தனது ஆதார், பான் எண் ஆகியவற்றை அவர் அனுப்பி வைத்தார். பின்னர் அவருடைய செல்போன் எண்ணுக்கு அடுத்தடுத்து வந்த அழைப்புகளில் பேசிய நபர்கள், ஆவணங்கள் பகுப்பாய்வு, செயல்முறை கட்டணம், ஆவணங்கள் தயார் செய்வதற்கான கட்டணம் என வெவ்வேறு காரணங்களை கூறி பணம் கேட்டனர்.

கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கிக் கணக்கு மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள் கடன் வாங்கிக் கொடுக்காமல், மேலும் பணம் பறிப்பதில் குறியாக இருந்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story