கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்பறையில் தமிழ் எழுத்துக்கள் அழிப்பு
திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்பறையில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டது. பல்வேறு ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தமிழில் பள்ளி நிர்வாகம் எழுதியது.
கேந்திரிய வித்யாலயா பள்ளி
மத்திய அரசின் சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவர்கள் தவிர மற்ற குழந்தைகளும் படித்து வருகிறார்கள்.
திருவாரூரை அடுத்த நீலக்குடி பகுதியில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இந்த பள்ளி இயங்கி வருகிறது. நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து தற்போது வகுப்புகள் நடந்து வருகிறது.
தமிழ் எழுத்துகள் அழிப்பு
இந்த பள்ளியில் திருவாரூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 800-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பறைகளின் நுழைவு வாயிலிலும் வகுப்பு, பிரிவு ஆகியவை தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளிலும் எழுதப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 6-ம் வகுப்பில் மட்டும் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் வர்ணம் பூசி அழிக்கப்பட்டது. இதனால் திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக தமிழார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் தமிழ் மொழியில் எழுத வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
மீண்டும் எழுதிய நிர்வாகம்
இதை தொடர்ந்து அந்த வகுப்பு அறையில் மீண்டு்ம் ஆறாம் வகுப்பு என்று தமிழில் எழுதப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது. அதன்படி மீண்டும் தமிழில் எழுதப்பட்டு உள்ளது.
வகுப்பறை மாற்றம் காரணமாகவே அந்த வகுப்பில் இருந்த தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டதே தவிர தமிழ் மொழியை நாங்கள் புறக்கணிக்கவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.