தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் ரவுடிகளின் விவரம் டிஜிட்டல் மயமானது
தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் ரவுடிகளின் விவரம் அடங்கிய புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டார்.
சென்னை,
ரவுடிகளின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் டிராக் கேடி என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முறைப்படி அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா தலைமையிலான குழுவினர் இந்த செயலியை உருவாக்கி உள்ளனர். புதிய செயலியை வெளியிட்ட நிகழ்ச்சியிலும், இவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய செயலியில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை, அவர்களின் நன்னடத்தை பிரிவின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டு உள்ளனர் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் குற்றவாளிகளின் விவரமும் இதில் அடங்கும். இவர்கள் செய்த குற்ற விவரம் இருக்கும். நன்னடத்தை பிணையில் இருப்பவர்கள் அதை மீறும் பட்சத்தில் அது தொடர்பான எச்சரிக்கை தகவலும் இதில் வெளியாகும்.
30 ஆயிரம் ரவுடிகள்
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்கள் மற்றும் 9 கமிஷனரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் இதர குற்றவாளிகளின் பட்டியல் புதிய செயலி மூலம் டிஜிட்டல் மயமானது. இதன் மூலம் ரவுடிகளின் செயல்பாட்டை போலீசார் கண்காணிக்க முடியும்.
பழிக்கு பழிவாங்கும் கொலைகளை தடுக்க முடியும். ரவுடிகளின் சமூக விரோத செயலையும் கண்காணித்து தடுத்து நிறுத்தலாம்.
மொத்தத்தில் ரவுடிகளின் விவரங்கள் அதிகாரிகளின் விரல் நுனியில் இருக்கும் வகையில் இந்த செயலி பேருதவியாக இருக்கும்.