32 வகையான பணிகள் குறித்த விவரங்களை நாளை சமர்ப்பிக்க வேண்டும்


32 வகையான பணிகள் குறித்த விவரங்களை நாளை சமர்ப்பிக்க வேண்டும்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் 32 வகையான பணிகள்குறித்த விவரங்களை நாளை (திங்கட்கிழமை) சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் 32 வகையான பணிகள்குறித்த விவரங்களை நாளை (திங்கட்கிழமை) சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணிகள், சாலை மேம்பாடு, வீடுகள் வழங்கும் பணிகள், சுகாதாரப்பணிகள், தூய்மை பணிகள், சுற்றுலா மேம்பாடு, விளையாட்டு மேம்பாடு, சமூக நலன்கள், சமூக காடுகள், ஊராட்சி பொது சொத்து பாதுகாத்தல் உள்ளிட்ட 32 வகையான அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் நாளை (திங்கட்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும்.

நிலுவை பணிகள்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிகள், சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள், தடுப்பணைகள், கழிவுநீர் கால்வாய்கள், சிறு பாலங்கள், பள்ளி சுற்றுச்சுவர், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளையும், சிமெண்டு சாலை பணிகளையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றார்.

இத்திட்டத்தின் கீழ் மாபெரும் மரம் நடவு திட்டம், கழிவறைகள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், நமக்கு நாமே திட்டப்பணிகள், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம், நபார்டு சாலைகள், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாடு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் தேவலாபுரம், துத்திப்பட்டு கிராம பகுதிகளில் நீர்வரத்து கால்வாய்களில் தண்ணீர் தங்குதடையின்றி செல்லுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன், செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி இயக்குநர் (தணிக்கை) பிச்சாண்டி மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story