மாற்றுப்பாதையால் வாகன ஓட்டிகள் அவதி
திருப்பத்தூர்- தருமபுரி சாலை விரிவாக்க பணிக்காக சிறுபாலங்கள் அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்றுப்பாதையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுப்பாதையால் அவதி
திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நக்கிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு அதன் அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாற்றுப்பாதையில் செல்ல ஒரே ஒரு இடத்தில் கூட தார் சாலை அமைக்கப்படவில்லை. 3 இடங்களிலுமே மண் நிரப்பப்பட்டு ஜல்லிக்கற்கள் மட்டுமே போடப்பட்டு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கரடுமுரடான மாற்று பாதையில் சென்று வருகின்றன. இந்த மாற்று பாதையில் வாகனங்கள் செல்லும்போது, நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்க வாகனங்களில் செல்வோரின் கண்களில் மண் துகள்கள் விழுந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும் ஜல்லி கற்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிறு பாலங்கள் அமைக்கும் மூன்று இடங்களிலும் தார் சாலை அமைக்க வேண்டும் அல்லது காலை மாலை இரு வேளையிலும் டிராக்டர் மூலம் தண்ணீர் தெளிக்கவும், மாற்றுபாதையில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.