மினிவிளையாட்டு அரங்கத்தில் தேவராஜி எம்.எல்.ஏ. ஆய்வு
ஜோலார்பேட்டையில் உள்ள மினிவிளையாட்டு அரங்கத்தில் தேவராஜி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறு விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு போதுமான இடவசதி மற்றும் தங்கும் அறைகள் இல்லாமல் உள்ளது. இதனால் இந்த சிறு விளையாட்டு அரங்கில் உள் விளையாட்டு அரங்கம், விளையாட்டு தங்கும் விடுதிகள், உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான உபகரணங்கள், நடைபயிற்சி மேற்கொள்ள தனி பாதை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி தொகுதியில் உள்ள 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை வைத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சிறு விளையாட்டு அரங்கில் தேவராஜி எம்.எல்.ஏ.ஆய்வு செய்தார்.
அப்போது உள்விளையாட்டு அரங்கில் உள்ள உடற்பயிற்சி கூடம், புல் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம், நடைபயிற்சி மேற்கொள்ள தனி பாதை அமைக்கவும், தங்கும் விடுதிகள் அமைப்பதற்கான இடங்களையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஜோலார்பேட்டை நகர தி.மு.க.செயலாளர் ம.அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சி. எஸ்.பெரியார்தாசன், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.