வளர்ச்சித்திட்ட பணிகள் ஆலோசனை கூட்டம்அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு
வளர்ச்சித்திட்ட பணிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டாா்.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, "சென்னிமலை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் வினியோகம், வடிகால் வசதி, தடையில்லா மும்முனை மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்", என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சூர்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்திரி, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.