மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டுவர வேண்டும்


மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டுவர வேண்டும்
x

மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டுவர வேண்டும் என மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.

திருப்பத்தூர்

திட்டக்குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட திட்டக்குழு முதல் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி மற்றும் மாவட்ட திட்டக்குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன் வரவேற்றார்.

மாவட்ட திட்டக்குழு முதல் கூட்டம் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் 12 பேரும் உறுதிமொழி ஏற்றனர். அதைத்தொடர்ந்து, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான பணிகள் என்ன? என்பது குறித்து காணொலி காட்சி வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டது.

வளர்ச்சி பணிகள்

கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:-

திட்டக்குழு உறுப்பினர்கள் முதலில் மாவட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மக்களுக்கு பயன்தரக்கூடிய வளர்ச்சிப்பணிகள் எதை கொண்டு வரலாம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள் கொண்டு வருதல், சிறு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வசதி, தொழில் முனைவோர்களை அதிகமாக உருவாக்குதல் போன்ற திட்டங்களை அதிக அளவில் கொண்டு வர வேண்டும்.

அதேபோல, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருதல், தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்டுதல், சிறுபாலம், மேம்பாலம் அமைத்தல் போன்றவற்றை ஆய்வு செய்து அதை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சிப்பெற இக்குழுவினர் சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயகுமாரி, நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவர்கள் சத்யா, திருமதி, வெண்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story