பர்கூர் ஒன்றியத்தில்ரூ.1.40 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்கலெக்டர் சரயு நேரில் ஆய்வு
பர்கூர்
பர்கூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
பர்கூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மல்லப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ரூ.44 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 3 வகுப்பறை கட்டிட கட்டுமான பணி நடந்து வருகிறது. மேலும் மரிமானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் புதிய சமையல் அறை கட்டுமான பணி மற்றும் ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதே போல சிகரலப்பள்ளி ஊராட்சி சக்கில்நத்தம் கிராமத்தில் ரூ.26 ஆயிரம் மதிப்பில் பெரியார் சிலை வர்ணம் பூசும் பணி, ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சமத்துவபுரத்தில் உள்ள 89 வீடுகளுக்கு வர்ணம் பூசும் பணி, ரூ.35 ஆயிரம் மதிப்பில் புதிதாக பெரியார் நினைவு சமத்துவபுர நுழைவுவாயில் வளைவு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஏரிக்கரை தூர்வாரும் பணி
தொடர்ந்து மாதேப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் எஸ்.எச்.சாலை முதல் விவேகானந்தர் நகர் வரை கான்கிரீட் சாலை, பாலேப்பள்ளி ஊராட்சி முருக்கம்பள்ளம் கிராமத்தில், ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதிதாக சமையல் கூடம் கட்டுமான பணி, வீரபந்திர நகர் கிராமத்தில் ரூ.9 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் வெங்கடபதி நாயக்கன் ஏரி மதகு மற்றும் ஏரிக்கரை தூர்வாரும் மற்றும் வலுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதே போல் வெண்ணம்பள்ளி கிராமத்தில் முனிவெங்கட்டம்மாள் என்பவரின் விவசாய நிலத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் மண் வரப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. வெண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.4 லட்சம் 96 ஆயிரம் மதிப்பில், பெண்கள் கழிவறை கட்டிட கட்டுமான பணிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ரூ.35 ஆயிரம் மதிப்பில் சமையல் அறை கூடம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதிய உணவு
தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, முட்டை ஆகியவற்றின் விவரங்களை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பொறியாளர்கள் செல்வம், பூங்கோதை மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.