வளர்ச்சி திட்ட பணிகள்


வளர்ச்சி திட்ட பணிகள்
x

மன்னார்குடி-கோட்டூர் வட்டார பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஷ் அகமது ஆய்வு செய்தார்.

திருவாரூர்

வடுவூர்:

மன்னார்குடி-கோட்டூர் வட்டார பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஷ் அகமது ஆய்வு செய்தார்.

வளர்ச்சி பணிகள் ஆய்வு

மன்னார்குடி மற்றும் கோட்டூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆணையர் டாக்டர்.தாரேஷ் அகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக மன்னார்குடி ஒன்றியம் சேரன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் ரூ.47 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி சுற்றுச்சுவரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆணையர் டாக்டர். தாரேஷ் அகமது, மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் பள்ளி பாடங்கள் குறித்து கலந்துரையாடினர். பின்னர் சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நட்டனர்.

உணவு தானிய கிடங்கு

அதே பகுதியில் ரூ.14 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினையும், சேரன்குளம் ஊராட்சி தாளாங்காட்டு தெருவில் நடந்து வரும் குடிசை கணக்கெடுப்பு பணிகளையும், சேரன்குளம் ஊராட்சி கரம்பை பகுதியில் ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் வாய்க்காலில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும், சேரன் குளம் பள்ளிக்கூடத்தெருவில் ரூ.21 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சிமெண்டு கான்கிரீட் வடிகாலையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் நாலாம்சேத்தி கிராமத்தில் நூலக கட்டிடம் பழுதுநீக்க பணிகளையும், குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மண்புழு உர கொட்டகை

கோட்டூர் ஒன்றியம், பனையூர் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் மகளிர் குழு சேவை மையத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். சேரி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் மண்புழு உர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளதையும், ஆதிச்சபுரம் ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் செங்குத்து உறிஞ்சு குழியையும், ரூ.35 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் கொட்டகையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னியின் செல்வன், செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் மகாதேவன், உதவி கலெக்டர் கீர்த்தனாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பக்கிரிசாமி, சிவக்குமார், சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா மனோகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமாறன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story