ரூ.2 ¾ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
வாணாதிராஜபுரம், கடலங்குடி ஊராட்சிகளில் ரூ.2¾ கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
குத்தாலம்:
வாணாதிராஜபுரம், கடலங்குடி ஊராட்சிகளில் ரூ.2¾ கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாணாதிராஜபுரம் ஊராட்சியில் ரூ.2 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாரத பிரதமர் சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகள், சிமெண்டு நெற்களம் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 100 நாள் பணிகள்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பணிகள், பயணிகள் நிழலகம், சமுதாய கழிவறை உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, கஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழரசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சங்கர் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரி சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கடலங்குடி ஊராட்சி
இதே போல கடலங்குடி ஊராட்சியில் 18 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் பயணிகள் நிழலகம், பாலம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அறிவுச்செல்வன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமுதா ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.