ரூ.1.94 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.1.94 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 3 May 2023 1:00 AM IST (Updated: 3 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.1 கோடியே 94 லட்சம் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி நகராட்சி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கிருஷ்ணகிரி சின்ன ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகிய பகுதிகளில் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தம், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு, பஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம், மழைநீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணிகளை பார்வையிட்டு, நூலக கட்டிடத்தை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மழைநீர் வடிகால் கால்வாய்கள்

தொடர்ந்து, பழையபேட்டையிலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் உடனடியாக தூர்வார வேண்டும். புதிய கால்வாய்கள் கட்ட கருத்துரு தயார் செய்ய வேண்டும்.

பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கடைகளை அமைக்க வேண்டும். மேலும், கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமானதாக விற்க வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், சின்ன ஏரியை அழகுபடுத்தும் பணிகளுக்கு ஏற்கனவே கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய மீண்டும் கருத்துரு தயார் செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வேலி அமைக்கும் பணிகள்

தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக புறநகர் பஸ் நிலையத்தை பார்வையிட்டு, பஸ்கள் பராமரிப்பு, இட வசதி குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.79 லட்சம் மதிப்பில் பாப்பாரப்பட்டி, தாசாகவுண்டன் ஏரியில் சுற்றுசுவர் மற்றும் வேலி அமைக்கும் பணிகளையும், ஏரியைச் சுற்றி சுகாதார தூய்மை பணிகளையும், மேலும் பொதுமக்கள் ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் வசந்தி, நகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், இளநிலை அலுவலர் அறிவழகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story