ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள்
திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்ரு செய்தார்.
வளர்ச்சி பணிகள்
கந்திலி ஊராட்சி ஒன்றியம், ஆதியூர் ஊராட்சி ராவுத்தம்பட்டி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் துணை சுகாதார நிலைய கட்டடம், ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.5 லட்சத்தில் நடைபெற்றுவரும் பல்நோக்குமைய கட்டடம், ரூ.1.95 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர், எலவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.12.48 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகிய பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
அப்போது அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த உணவுகளை ஆய்வு செய்தார். கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணிகளை முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
கந்திலி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி எலவம்பட்டி கிராமத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன ஓட்டுனர் உரிமம் பதிவு, ஓட்டுனர் உரிமம் தேர்வு நடைபெறும் இடம், வாகனத்தின் தகுதி சான்று புதுப்பிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், குரும்பகேரி புதூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் துணை சுகாதார நிலைய கட்டுமான பணி மற்றும் தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, மணவாளன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தா, மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், பால் குளிரூட்டும் மைய மேலாளர் நரசிம்மன், மேற்பா்வையாளர் சாந்தினி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.