வேளாங்கண்ணியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேளாங்கண்ணி:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேளாங்கண்ணி பேராலயம்
வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக திகழ்கிறது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவ பேராலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற பெருமை மிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி மாதா பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும்.
கிறிஸ்துமஸ் பண்டிகை
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்படும்.
மின்விளக்கு அலங்காரம்
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின்விளக்கு அலங்காரம் செய்ய பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.