கொடைக்கானல் நட்சத்திர ஏரிச்சாலையில் ஆமை வேகத்தில் அபிவிருத்தி பணிகள்


கொடைக்கானல் நட்சத்திர ஏரிச்சாலையில் ஆமை வேகத்தில் அபிவிருத்தி பணிகள்
x
தினத்தந்தி 16 July 2023 2:30 AM IST (Updated: 16 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நட்சத்திர ஏரிச்சாலையில் ஆமை வேகத்தில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல்

கொடைக்கானலின் இதய பகுதியாக நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர். ஏரியை சுற்றிலும் சுற்றுலா பயணிகள் சைக்கிள், குதிரை சவாரி செய்வது வழக்கம். பல்வேறு சிறப்புக்கு சொந்தமான நட்சத்திர ஏரியை அழகுபடுத்தும் நோக்கில் நடைபாதை, பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

குறிப்பாக நெடுஞ்சாலை துறை சார்பில் ஏரிச்சாலையை சுற்றி சுமார் ரூ.70 லட்சம் மதிப்பில் 3 இடங்களில் பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த மே மாதம் சீசன் தொடங்கியதால் பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது சீசன் முடிவடைந்த நிலையில் மீண்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் ஏரிச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. கம்பிகள் அகற்றப்படவில்லை. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சைக்கிள், குதிரை சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர்.

பாலப்பணி நடைபெறுகிறது என்று அங்கு அறிவிப்பு பலகை எதுவும் வைக்கவில்லை. இதனால் புதிதாக ஏரிச்சாலையில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடைபெறுகிற அபிவிருத்தி பணியை துரிதப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story