நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணிகள்


நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணிகள்
x

நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

ரூ.4 கோடியில் பணிகள்

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ரூ.4 கோடியே 3 லட்சம் செலவில் அம்பாள் சன்னதி மேற்கு பிரகார மண்டபம், கருஉருமாறி தீர்த்தக்குளம், அம்மன் சன்னதி மேற்கூரை தட்டோடு சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைைம தாங்கி, கோவிலில் மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், மாநகராட்சி மேயர் சரவணன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

காலணி, பொருட்கள் பாதுகாப்பு அறை

கடந்த ஓராண்டுக்கு முன்பு நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு செய்தபோது பக்தர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தற்போது அம்பாள் சன்னதி மேற்கு பிரகார மண்டபம் மற்றும் கருஉருமாறி தீர்த்தக்குளம், அம்மன் சன்னதி மேற்கூரை தட்டோடு சீரமைக்கும் பணிகளுக்காக ரூ.4.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கு உபயதாரராக டி.வி.எஸ். குழுமம் மூலம் பணிகள் செய்யப்பட உள்ளது. ஓராண்டுக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். நெல்லையப்பர் கோவிலில் காலணி மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறை அமைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார். வருகிற 2 மாதங்களுக்குள் இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்.

புதிய தேர்கள்

கங்கைகொண்டான் மற்றும் ராஜவல்லிபுரம் கோவில்களுக்கு புதிய தேர்களும், நெல்லையப்பர் கோவிலில் தேருக்கு கண்ணாடி கவசமும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு உடனடியாக திட்ட மதீப்பிடு தயார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் ரூ.32 கோடி செலவில் 30 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 5 மாதங்களுக்குள் 3 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 38 கோவில்களில் அடுத்த ஆண்டு நிறைவுக்குள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

பிரம்மதேசம் கோவிலில்

மேலும் தமிழகத்தில் சுமார் ரூ.1,000 கோடி செலவில் 1,500 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல சரித்திர நிகழ்வாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அதில் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலில் ரூ.7 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அங்கு ரூ.34 லட்சம் செலவில் திருத்தேர் அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் விஜிலா சத்யானந்த், மூளிகுளம் பிரபு, முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள்எம்.எல்.ஏ. மாலைராஜா, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (திருப்பணிகள்) ஜெயராம், நெல்லை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) ஜான்சிராணி, உதவி ஆணையர் கவிதா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அம்பை

அம்பை அருகே மன்னார்கோவில் ராஜகோபாலசாமி கோவிலுக்கு நேற்று காலையில் அமைச்சர் சேகர் பாபு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தேர் திருப்பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். பின்னர் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளையும், அம்பை காசிநாத சுவாமி கோவிலில் நடைபெறும் ராஜகோபுர பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கோவில் நிர்வாக அலுவலர்கள் ரேவதி, கணேஷ்குமார், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன், அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன், நகர செயலாளர் கணேசன், பஞ்சாயத்து தலைவர்கள் பிரம்மதேசம் ராம் சங்கர், மன்னார்கோவில் ஜோதி கல்பனா பூதத்தான், வாகைகுளம் சுப்புலட்சுமி நந்தகுமார், வெள்ளாங்குளி முருகன், அம்பை நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story