ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்
ரூ.1½ கோடி செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சிவகாசி யூனியன் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சிவகாசி,
ரூ.1½ கோடி செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சிவகாசி யூனியன் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
யூனியன் கூட்டம்
சிவகாசி யூனியனில் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விவேகன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட லட்சுமிநாராயணபுரம், பள்ளப்பட்டி, எரிச்சநத்தம், புதுக்கோட்டை, எம்.புதுப்பட்டி, வாடியூர், வேண்டுராயபுரம், தேவர்குளம், ஆனையூர், விஸ்வநத்தம், சித்துராஜபுரம், வெள்ளூர், ஊராம்பட்டி, அனுப்பன்குளம், ஜமீன்சல்வார்பட்டி, காளையார்குறிச்சி, நெடுங்குளம், நாரணாபுரம், மங்கலம், மாரனேரி ஆகிய பகுதியில் ரூ.1½ கோடி செலவில் வளர்ச்சி பணிகளை செய்ய கவுன்சிலர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சாலையை சீரமைக்க வேண்டும்
அதன் பின்னர் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-
சுடர்வள்ளி சசிக்குமார்: சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் இருந்து பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதிக்கு செல்லும் சாலை தார் சாலையாக இருந்து தற்போது மண் சாலையாக மாறி உள்ளது. இந்த பகுதியை கடந்து செல்வதில் பெரும் சிரமமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
தலைவர்: இங்கு பேசிய பல கவுன்சிலர்கள் கழிப்பிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். உங்கள் பகுதியில் கழிப்பிடம் கட்ட தேவையான இடங்களை தயார் செய்து கொடுத்தால் கழிப்பிடம் கட்டி தருவதில் காலதாமதம் ஏற்படாது. நீர்நிலைகளிலும், நீரோடைகளிலும் கழிப்பிடம் கட்ட முடியாது. குறிப்பாக நீர்வரத்து பாதைகளில் அரசு கட்டிடங்களை கட்ட வருவாய்த்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனவே தேவையான இடங்களை சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் அடையாளம் காட்ட வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.