கொடுமுடியில் தீர்த்தம் எடுத்த பக்தர் ஆற்றில் மூழ்கி சாவு
கொடுமுடியில் தீர்த்தம் எடுத்த பக்தர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஊஞ்சலூர்:
கொடுமுடியில் தீர்த்தம் எடுத்த பக்தர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தீர்த்தம் எடுக்க வந்தனர்
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள சி.கூடலூர் பகுதியில் தொம்ப கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் நேற்று மதியம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மணல்மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.
அவர்களுடன் சி.கூடலூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 40) என்பவரும் வந்திருந்தார். இந்த நிலையில் விஜயகுமார் உள்பட அனைவரும் காவிரி ஆற்றில் நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்து கொண்டிருந்தனர்.
ஆற்றில் மூழ்கி சாவு
அப்போது விஜயகுமார் ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு விஜயகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஜயகுமார் ஆற்றில் மூழ்கி இறந்த இடம் ஆழமான பகுதி. இதுவே அவர் உயிரிழக்க காரணமாகி விட்டது. இறந்த விஜயகுமாருக்கு சுமதி (35) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.