சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி..!


சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி..!
x

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருகிற 5-ந் தேதி சித்திரை மாத பவுர்ணமி, 3-ந் தேதி பிரதோஷம் என்பதால் வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வகம் அனுமதி அளித்துள்ளனர். காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி சென்று கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இந்த மாதம் சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.


Next Story