திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடியில் இருந்து, திருமலைநம்பி கோவில் வரையிலான மலைப்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இதையடுத்து கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். சாலை பராமரிப்பு பணிகள் மிகவும் மந்தமாக ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் சாலை பராமரிப்பு பணிகள் முழுமை அடைந்தன. ஆனால் பக்தர்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதனிடையே நேற்று முதல் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினர் விலக்கினர். 3 மாதங்களுக்கு பின்னர் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.