கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவிப்பு
தொரப்பள்ளி, மசினகுடி சோதனைச்சாவடிகள் மூடப்பட்டதால், கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்தனர். அவர்கள் சாைல மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
தொரப்பள்ளி, மசினகுடி சோதனைச்சாவடிகள் மூடப்பட்டதால், கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்தனர். அவர்கள் சாைல மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலைகள் மூடல்
மசினகுடி அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஊட்டி தலை குந்தாவில் இருந்து மசினகுடிக்கு மலைப்பாதை செல்கிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் உள்ளூர் வாகனங்களை மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தினமும் இரவு 9 மணிக்கு கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பக சாலைகள் மூடப்படுகிறது. மேலும் முதுமலை புலிகள் காப்பக சாலைகளையும் வனத்துறையினர் மூடி வருகின்றனர். இதனால் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மசினகுடிக்கு இரவில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
பக்தர்கள் தவிப்பு
தற்போது பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் இரவு-பகலாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு முதுமலை புலிகள் காப்பக எல்லையான தொரப்பள்ளி, மசினகுடி பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளை வனத்துறையினர் அடைத்தனர்.
ஆனால் தமிழக அரசின் சிறப்பு பஸ்கள் மட்டும் இரவு நேரத்தில் கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்ததால், அதற்கு வனத்துறையினர் அனுமதித்தனர். ஆனால் பக்தர்களின் வாகனங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடுவழியில் நின்று தவித்தனர்.
இரவிலும் செல்ல அனுமதி
வெகு நேரம் காத்து கிடந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்து வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு பஸ்கள் செல்ல முடியாத வகையில் சாலைகளில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் விரைந்து வந்து வன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து இரவு 11 மணிக்கு சோதனைச்சாவடிகளை வனத்துறையினர் திறந்தனர். அதன்பின்னர் பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு ஏற்ப 2 நாட்கள் மட்டும் இரவிலும் வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்றனர்.