ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஈரோடு காவிரிக்கரையில் பக்தர்கள்கன்னிமார் பூஜை செய்து வழிபாடு; போதிய வசதிகள் இல்லாததால் சிரமம்
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் பக்தர்கள் கன்னிமார் சாமி பூஜை செய்து வழிபாடு செய்தனர். போதிய வசதிகள் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் பக்தர்கள் கன்னிமார் சாமி பூஜை செய்து வழிபாடு செய்தனர். போதிய வசதிகள் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.
காவிரிக்கரை
ஈரோடு மாவட்டத்தில் காவிரிக்கரை முழுவதும் உள்ள அனைத்து கோவில்களை ஒட்டியும் நேற்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அம்மாபேட்டை சொக்கநாதர் கோவில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், ஈரோடு கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவில், ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்று ஒவ்வொரு கோவிலை ஒட்டியும், காவிரி ஓடும் கிராமப்பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.
கருங்கல்பாளையம்
அதன்படி நேற்று ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர். ஈரோட்டில் கன்னிமார் பூஜை செய்து வழிபாடு செய்வது சிறப்புக்கு உரியதாகும். காவிரியில் தண்ணீர் குறைவாக செல்லும் காலங்களில் காவிரி மணலில் பக்தர்கள் கன்னிமார் சாமியை படைத்து பூஜை செய்வது வழக்கம். ஆனால் தற்போது வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளதால் கரையை தொட்டு காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் உள்ளது.
எனவே பக்தர்கள் காவிரியை ஒட்டி உள்ள முனியப்பன்நகர் மண்ரோட்டில் பூஜை செய்தனர். இதனால் காவிரிக்கரையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று கன்னிமார் சாமி படைத்து பூஜை செய்தனர். ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருப்பதால் உள்ளே இருந்த கூழாங்கற்கள் எடுத்து கன்னிமார் சாமி வைக்க முடியாது என்று ஏற்கனவே எடுத்த கற்களை சிலர் விற்பனைக்கு வைத்து இருந்தனர். பலரும் பூஜை பொருட்கள், முளைப்பாரி ஆகியவற்றுடன் கூழாங்கற்களையும் எடுத்து வந்தனர்.
சோழீஸ்வரர்
பூஜையை தொடர்ந்து சோழீஸ்வரர் கோவிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கருங்கல்பாளையத்தில் நடந்த பூஜைகளில் இல்லத்தரசிகள், இளம்பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஆனால், காவிரியில் புனித நீராட எந்த சிறப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. காவிரிக்கரையை ஒட்டி ஆகாயத்தாமரை அதிக அளவில் வளர்ந்து கிடந்தது. வழக்கமாக பொதுமக்கள் இறங்கும் ஒரு சில இடங்கள் தவிர அனைத்து இடங்களும் பாதுகாப்பற்ற பகுதிகளாகவே இருந்தன. காவிரியில் புனித நீராடிய பெண்கள் உடைகளை மாற்ற மிகவும் சிரமப்பட்டனர். எனவே காவிரிக்கரையில் படித்துறை கட்டவும், பெண்கள் நீராட போதிய இடவசதி மற்றும் உடைமாற்ற வசதி செய்து தரவும் பெண் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.