நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2 நாட்கள் தடை
திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் பக்தர்களுக்கு 2 நாட்கள் தடை விதித்து உள்ளனர்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலைநம்பி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (வியாழன்), நாளை மறுநாள் (வெள்ளி) ஆகிய 2 நாட்கள் மட்டும் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், 12-ந் தேதி (சனிக்கிழமை) முதல் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.