துடைப்பத்தால் அடித்துக்கொண்ட பக்தர்கள்


துடைப்பத்தால் அடித்துக்கொண்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 4 May 2023 12:30 AM IST (Updated: 4 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே நடந்த கோவில் திருவிழாவில், துடைப்பத்தால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி

சித்திரை திருவிழா

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் 2 நாட்கள் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வினோத நிகழ்ச்சி

ஆண்டிப்பட்டி பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவின் இறுதியாக மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்.

ஆனால் மறவபட்டி முத்தாலம்மன் திருவிழாவின் இறுதி நாளில், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அந்த நிகழ்ச்சி நடந்தது.

இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தங்களின் மாமன், மைத்துனர்களுடன் கோவில் முன்பு கூடினர். பின்னர் அவர்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி தொடங்கியது. அதில் துடைப்பத்தை கழிவுநீர், சேறு மற்றும் சகதியில் நனைத்து கொண்டு மாமன், மைத்துனர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.

மீண்டும் உறவு வளரும்

மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கினர். இந்த வினோத நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

துடைப்பத்தை கழிவுநீரில் நனைத்து தாக்கிக்கொள்வதால் குடும்பத்தில் சந்தோசம் நிலவும் என்றும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். மேலும் நீண்டநாள் பிரிந்து வாழும் உறவுகள் திருவிழாவின் போது சந்தித்து துடைப்பத்தால் அடி வாங்கி கொள்வதால் மீண்டும் உறவு வளரும் என்பது ஐதீகம் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.


Related Tags :
Next Story