தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
வடமதுரை அருகே கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வடமதுரை அருகே கே.குரும்பபட்டியில் அகோர வீரபத்திரர், ராவணேஸ்வரர், கருக்காளியம்மன், கெப்பாயியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். மேலும் கோவில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு ஆற்றுக்கு சென்று கரகம் எடுத்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
இதனையடுத்து நேற்று சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விரதம் இருந்த ஆண், பெண் பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் முன்பு வரிசையாக அமர்ந்தனர். இவர்களின் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்தார். மேலும் சாட்டையால் அடித்து பக்தர்களுக்கு அவர் ஆசி வழங்கினார். சாட்டையடி பெற்று நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.