பல்வேறு வேடம் அணிந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்
டி.கல்லுப்பட்டியில் உள்ள புதுமாரியம்மன் கோவில் திருவிழாவில் பல்வேறு வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டியில் உள்ள புதுமாரியம்மன் கோவில் திருவிழாவில் பல்வேறு வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
புதுமாரியம்மன் கோவில் திருவிழா
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் பிரசித்தி பெற்ற புது மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
அது போல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 4 நாட்களாக நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.
வேடம் அணிந்த பக்தர்கள்
இதைெயாட்டி மாவிளக்கு, முளைப்பாரி, உருவார பிள்ளை செலுத்துதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக பொண்ணு மாப்பிள்ளை மற்றும் பல்வேறு கடவுள்கள் உருவம், விழிப்புணர்வு வேடம் அணிந்து ஊர்வலமாக நடந்து சென்றும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் வந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்களை சாலையின் இருபுறத்திலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். முன்னதாக கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.கல்லுப்பட்டி போலீசார் செய்திருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.