மூலவர் பெரிய பெருமாள் திருவடியை இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம்


மூலவர் பெரிய பெருமாள் திருவடியை இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம்
x

மூலவர் பெரிய பெருமாள் திருவடியை இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

ஜேஷ்டாபிஷேகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் ஆகும். இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும்.

ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர்.

பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு

48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். இதனால் மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி அன்று காவிரி ஆற்றில் 1 தங்கக்குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டிற்கான முதல் தைலகாப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன.

திருவடி சேவை

அதனைத் தொடர்ந்து பெரிய பெருமாளின் திருவடி சேவை நிறுத்தப்பட்டது. தற்போது 48 நாட்களுக்கு பிறகு தைலகாப்பு உலர்ந்துவிட்டதால் இன்று (வெள்ளிக்கிழமை) பெரிய பெருமாளுக்கு புணுகு காப்பு சாற்றப்பட்டு, கலசங்கள் மாற்றி அலங்காரம் செய்விக்கப்பட்டு மாலை 3 மணி முதல் பெரிய பெருமாளின் திருமுகம் மற்றும் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கோவில் இணை ஆணையர் செ.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.


Next Story