கழுமரம் ஏறிய பக்தர்கள்
செந்துறை அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் கழுமரம் ஏறினர்.
செந்துறை அருகே உள்ள மணக்காட்டூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 29-ந்தேதி இரவு கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி முத்தாலம்மன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மின்ரதத்தில் அம்மன் ஊர்வலமாக வந்தார். நேற்று காலை அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், அக்கினிசட்டி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பின்னர் படுகளம் போடுதல், குட்டி கழுமரம் ஏறுதல், பந்தய கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கழுமரத்தில் போட்டி போட்டு ஏறினர். அதில் பழனிபட்டியை சேர்ந்த சின்னக்கருப்பன் என்பவர் கழுமரம் ஏறி இலக்கை தொட்டார். பின்னர் பொங்கல் வைத்து, கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தீவட்டி பரிவாரங்கள், வாண வேடிக்கையுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மணக்காட்டூர் ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.